சுப்பிரமணியபுரம் படம் அந்த இயக்குனர் எழுதிய கதையா?!.. இது தெரியாம போச்சே!...
Subramaniapuram: சசிக்குமார் எழுதி இயக்கி நடித்த திரைப்படம்தான் சுப்பிரமணியபுரம். 80களில் மதுரை மாவட்டங்களில் சுற்றி திரிந்த இளைஞர்கள் பற்றிய கதை இது. 80களில் நட்பு, காதல் போன்றவை எப்படி இருந்தது என காட்டியிருந்தார். குறிப்பாக, நட்பென்றால் புனிதமானது, நட்பு நல்லது மட்டுமே செய்யும், ஒருவனுக்கு துன்பம் எனில் நண்பன் வருவான் என காலம் காலமாக நட்பை புனிதப்படுத்தியே சினிமாவில் காட்டியிருக்கிறார்கள்.
கல்ட் கிளாசிக் திரைப்படம்: ஆனால், நட்பு துரோகமும் செய்யும் என்பதை சுப்பிரமணியபுரம் படத்தில் தோலுரித்து காட்டியிருந்தார் சசிக்குமார். சுப்பிரமணியபுரம் தமிழ் சினிமாவின் முக்கிய கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இயக்குனர்களே பார்த்து வியக்கும்படி படத்தை இயக்கியிருந்தார் சசிக்குமார். இத்தனைக்கும் இது அவரின் முதல் திரைப்படம்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சென்னை வந்து சசிக்குமாரை சந்தித்து பாராட்டிவிட்டு போனார். இந்த படத்தில் ஜெய்யும், சசிக்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அவர்களுடன் சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
காதல் துரோகமும் செய்யும்: நட்பு மட்டுமல்ல.. காதலுக்காக பெண்கள் குடும்பத்தையே தூக்கி எறிவார்கள் என சினிமாவில் காட்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் குடும்பத்துக்காக காதலி துரோகமும் செய்வாள் என காட்டியிருந்தார் சசிக்குமார். ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த திரைப்படம்.
அமீரின் குற்றவாளி: ஆனால், இந்த படத்தின் முக்கிய காட்சிகளுக்கான ஐடியா இயக்குனர் அமீரிடம் இருந்தது பலருக்கும் தெரியாது. மதுரையை பின்னணியாக கொண்டு குற்றவாளி என்கிற கதையை உருவாக்கி வைத்திருந்தார் அமீர், உறவுகளுக்காகவும், நட்புக்காகவும் குற்றங்களை செய்பவர்கள் பற்றிய கதை இது. ஆனால், அந்த கதையை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. அதோடு அவர் ராம், பருத்திவீரன் போன்ற படங்களை இயக்க போனதால் குற்றவாளி கதையை எடுக்கவில்லை.
அவரிடம் உதவியாளர்களாக இருந்த சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்களிடம் இந்த கதை பற்றி அமீர் விவாதித்திருக்கிறார். அதிலிருந்து ஒரு விஷயத்தை எடுத்து காதல், துரோகம் எல்லாவற்றையும் கலந்து சுப்பிரமணியபுரம் படமாக எடுத்திருக்கிறார் சசிக்குமார். குற்றவாளி கதையில் அமீர் எழுதிய சில காட்சிகள் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்திலும் இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது.