கமலும் சரி. சிங்கீதம் சீனிவாசராவும் சரி. புதிய கோணத்தில் சிந்திப்பவர்கள். அதுதான் அவர்களை பல படங்களில் இணைய வைத்தது. இருநிலவுகள் என்ற படத்தில் தான் தமிழ்சினிமாவில் முதன் முதலாக இரட்டை வேடத்தைக் கொண்டு வந்தார் சிங்கீதம் சீனிவாசராவ். அதே போல கமலை வைத்து இரட்டைவேடம் மட்டுமல்ல.
நான்கு வேடங்களையும் எடுத்து படமாக்கியவர் அவர்தான். இரட்டை வேடத்தில் அபூர்வசகோதரர்கள். குள்ள கமலை நேர்த்தியாக செதுக்கி இருந்தார். அதே போல நாலு வேடத்தில் மைக்கேல் மதன காமராஜன் படம் மிகச்சிறப்பு. மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ், பேசும் படம் இன்றும் பேசப்படும்.
கன்னட பட உலகில் ராஜ்குமாருக்கு 6படங்கள் பண்ணி இருக்கார். ஆறும் வித்தியாசம். மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நாடக ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலகளம் கண்டவர். அபூர்வசகோதரர்கள் படம் முதலில் ஒரு பஸ் வைத்து எடுக்கப்பட்டது.
அதுல குள்ள கமல் எல்லா வேலைகளும் செய்து, சர்க்கஸ் கூடாரம் சென்று கோமாளியாக நடிக்கிறான். அது 13 நாள் சூட்டிங். பஸ் ரெடி. ஆனா அதுல ஒண்ணும் சுவாரசியம் இல்லை. அடுத்து ஒரு பாட்டு 13 நாள் சூட்டிங். அதுவும் திருப்தி இல்லை. அப்போ என்ன பண்ணலாம்னு யோசித்த போது பஞ்சு ஒரு பழைய பார்முலா கதையை சொல்றார்.
அப்பனைக் கொன்னவனை பழிவாங்குற கதை. அம்மாவுக்கு விஷம் கொடுத்ததால் குள்ள கமல் பிறக்கிறான். அவன் பழிவாங்க, தம்பியான நெட்டை கமல் மீது பழி விழுகிறது. இதுதான் கதைன்னு பஞ்சு சொல்ல அதை திரைக்கதையாக்குகிறார் கமல். அப்படித்தான் உருவானது அபூர்வசகோதரர்கள் என்கிறார் கமலின் நண்பர் ராசி அழகப்பன்.
ஒருவர் ரிஸ்க்னு சொன்னா, அதை பண்ணிடுவோம்னு சொல்வார் கமல். முடிவெடுத்தால் மாற்ற மாட்டார். இந்தக் குணம் சிங்கீதம் சீனிவாசராவிடமும் இருந்தது என்கிறார் ராசி அழகப்பன்.







