தமிழ் சினிமாவில் காதல் படங்கள் ஏராளமாக வெளியாகியிருந்தாலும், சில படங்கள் மட்டுமே காலம் கடந்தும் ரசிகர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்த திரைப்படம் 96 . விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் ரசிகர்களைக் கொண்டாடவும், கண்கலங்கவும் வைத்த இந்த காதல் திரைப்படம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.
சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய 96 திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. பள்ளிப் பருவத்தில் மலரும் காதல், காலத்தின் ஓட்டத்தில் ஏற்படும் பிரிவு, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்பாராத சந்திப்பு என மிகவும் எளிமையான கதையை ஆழமான உணர்வுகளுடன் சொல்லப்பட்டிருந்தது.

பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு Reunion நிகழ்ச்சியில் சந்திக்கின்றனர். அங்கு தனது பள்ளிப் பருவ காதலியான ஜானுவை மீண்டும் சந்திக்கிறார் ராம். இருவரும் சில மணி நேரங்கள் ஒன்றாக செலவிடும்போது அவர்களின் கடந்தகால காதல், பிரிவு, சொல்லப்படாமல் போன வார்த்தைகள் மற்றும் நிறைவேறாத ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. இந்த உணர்வுகளை மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்சிப்படுத்திய விதமே 96’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பலமாக அமைந்தது.
படத்தில் ராமச்சந்திரன் என்ற ராம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானகி என்ற ஜானு கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக அதிக வசனங்கள் இல்லாமலேயே ராமின் காதல், ஏக்கம், தயக்கம் ஆகியவற்றை விஜய் சேதுபதி வெளிப்படுத்திய விதமும், ஜானுவாக திரிஷாவின் இயல்பான நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. படம் வெளியாகி ஆண்டுகள் கடந்த பிறகும் சமூக வலைதளங்களில் ராம் – ஜானு என்றாலே 96 நினைவுக்கு வரும் அளவுக்கு அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.

விஜய் சேதுபதி, திரிஷாவுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளம் வயது ராம் – ஜானுவாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனுக்கும் படம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
96 படத்தின் வெற்றிக்கு கோவிந்த் வசந்தாவின் இசையை தவிர்க்க முடியாது. படத்தின் காட்சிகளுக்கு இணையாக பின்னணி இசையும் ரசிகர்களை கதைக்குள் அழைத்துச் சென்றது. காதலே காதலே , தி லைஃப் ஆஃப் ராம் , அந்தாதி உள்ளிட்ட பாடல்கள் படம் வெளியானபோது பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக காதலே காதலே பாடல் காதல் இசை ரசிகர்களின் Playlist-ல் இன்றளவும் இடம்பிடித்துள்ளது. 96 வெளியானபோது விமர்சகர்களிடம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், அக்டோபர் 9, 2026 அன்று 96 மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழைய திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது 96 படமும் இணைகிறது.







