சுண்ணாம்பு அடிக்கும் வேலை: சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது மற்றும் திரைப்பட ஷூட்டிங்கில் எடுபுடி வேலைகளை செய்வது என கிடைக்கும் வேலைகளை செய்து வாய்ப்பு தேடியவர்தான் சூரி. கூட்டத்தில் ஒருவனாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த சூரி ஒரு கட்டத்தில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக மாறினார்..
பரோட்டா சூரி: அப்படி அவர் நடித்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தவே பரோட்டா சூரியக மாறினார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அதில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. அதன்பின் சூரி தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராகவும் மாறினார். அஜித், விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார்.
விடுதலை மூலம் ஹீரோ: அதேநேரம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து ஹீரோவாக மாறினார் சூரி. அதன்பின் கருடன், மாமன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் வெற்றியை பெற்றன. தற்போது தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே சூரி நடித்து வருகிறார்.. விரைவில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சூரி நடிக்க வந்த பொழுதில் தனக்கு ஏற்பட்ட பல அவமானங்களை பற்றியும் பேசி வருகிறார்.
சட்டையை கழட்டிய படக்குழு: சமீபத்தில் சூரி அளித்த பேட்டியில் ‘நான் நடிக்க வந்த புதிதில் ஒரு பெரிய காமெடி நடிகருடன் ஒரு காட்சியில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நானும் பல நாட்கள் பட்டினி கிடந்து அந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஷுட்டிங்கிற்கு சென்ற பின் அவர்கள் எனக்கொரு சட்டை கொடுத்தார்கள்.. நானும் அந்த காட்சியில் நடித்தேன்.. அது ஒரு சின்ன வசனம்தான்..
சட்டையை கழட்டிய படக்குழு: ஆனால் மானிட்டரை நடிகரும், இயக்குனரும் பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள்.. அப்போதே எனக்கு புரிந்து விட்டது. என்னிடம் வந்து ‘இந்த சீனில் நீ வேண்டாம்.. இதைவிட ஒரு நல்ல காட்சி இருக்கிறது.. அதில் நீ நடி’ என்றார்கள்.. அது பொய் என எனக்கு புரிந்து விட்டது. எனக்கு கொடுத்த சட்டையை கழட்டி பரிந்துரையில் வந்த வேறொரு நபருக்கு அந்த சட்டையை கொடுத்து நடிக்க வைத்தார்கள். எனக்கு அழுகையே வந்துவிட்டது..
வெற்றிதான் பேசும்: நான் அணிந்த வந்த சட்டையை எங்கோ கழட்டி வீசிவிட்டார்கள். கட்டியிருந்த துண்டுடன் என் சட்டையை தேடி அலைந்தேன்.. தற்போது என்னுடைய படம் வெளியாகும் போதும் அவர்களிடமிருந்து எனக்கு வாழ்த்து செய்தியும் வருகிறது.. ஆனால் நான்தான் அவன் என்று அவர்களுக்கு தெரியாது.. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளர்.. இப்படி எல்லாம் வழிகளை கடந்துதான் நான் வந்திருக்கிறேன்.. சத்தமே போடாமல் கத்துவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா’ என்று அவர் பேசியிருக்கிறார்.







