எம்ஜிஆர் நடித்த இதயவீணை, சிரித்து வாழ வேண்டும் ஆகிய 2 படங்களும் ஜெமினி ஸ்டூடியோவில் தயாரானவை. எம்ஜிஆரின் 100வது படமான ஒளிவிளக்கைத் தயாரித்தது ஜெமினி ஸ்டூடியோ. இந்தப் படங்கள் எல்லாம் ஜெமினியில் உருவானபோது எம்ஜிஆரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றவர் எஸ்எஸ்.பாலன். அவர் எம்ஜிஆரை வைத்து தயாரித்த படம் சிரித்து வாழ வேண்டும்.
எம்ஜிஆருக்கும், உங்களுக்குமான உறவு தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முறையில் ஒரு நடிகர் என்ற நட்போடு இருந்ததா? இல்லை அதை மீறி அவரோடு நட்பாக இருக்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததா என்று எஸ்எஸ்.பாலனிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். எம்ஜிஆரைப் போல் ஒரு இனிமையான நண்பரைப் பார்க்க முடியாது. அதுமட்டும் அல்லாமல் அவர் பழகுவதற்கும் எளிமையானவர் என்றார் எஸ்எஸ்.பாலன்.
அதுமட்டும் இல்லாமல், பலமுறை அவர் வீட்டு உணவை நான் சாப்பிட்டு இருக்கிறேன். அவ்வளவு சுவையாக இருக்கும். எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் சினிமா உலகின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி நான் தெரிந்து வைத்து இருந்ததுதான். எம்ஜிஆருக்கு சினிமாவுல தெரியாத விஷயங்களே இல்லைன்னு சொல்லலாம்.
என்மேல் அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்ததுக்கு அந்த டெக்னிகல் நாலெட்ஜ் கூட முக்கியமான காரணமா இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதன்காரணமாகத்தான் என்னுடைய சிரித்து வாழ வேண்டும் படத்திற்கு அவர் முழு ஒத்துழைப்பையும் தந்தார் என பதில் சொல்லி இருக்கிறார் எஸ்.எஸ்.பாலன்.







