தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்த தேனிசை தென்றல் தேவா நேற்று காலை மாரடைப்பில் காலாமானர். முன்னாள் நடிகர் மற்றும் முதல்வர் விஜய் நேற்று நேரில் சென்று தேவாவுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தேவாவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதை அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் அறிமுகமான ரசிகன் படத்திற்கு இசை தேவாதான். அதோடு, விஜயை முதன் முதலாக சினிமாவில் பாட வைத்தவரும் தேவாதான். விஜய் நடித்த 2வது படமான ரசிகன் படத்தில் ‘பாம்பே சிட்டி சுக்கா ரெட்டி’ பாடல் மூலம் விஜயை பாடகராக மாற்றினார். அந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின், 1995ம் வருடம் வெளியான விஷ்ணு படத்தில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’ பாடல், தேவா படத்தில் ‘ஒரு கடிதம் எழுதினேன், அய்யய்யோ அலமேலு, கோத்தகிரி குப்பம்மா’ என 3 பாடல்கள், 1996ம் வருடம் வெளியான் மாண்புமிகு மாணவன் படத்தில் இடம் பெற்ற ‘திருத்தணி போனா பட்ட’, 1997ம் வருடம் வெளியான காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் இடம் பெற்ற ‘அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்’, ஒன்ஸ்மோர் படத்தில் இடம் பெற்ற ‘ஊர்மிளா ஊர்மிளா’ பாடல், 1998ம் வருடம் வெளியான பிரியமுடன் படத்தில் ‘மௌரியா மௌரியா’, 1999ம் வருடம் வெளியான நெஞ்சினிலே படத்தில் ‘தங்க நிறத்துக்கு’ என மொத்தம் 10 பாடல்களை தேவாவின் இசையில் விஜய் பாடியிருக்கிறார்.
தனது இசையில் விஜய் பாடியது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய தேவா ‘விஜயின் அம்மா ஷோபா ஒரு கர்நாடக இசை பாடகி. இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அவரின் மகன் என்பதால் விஜயும் நன்றாகவே பாடுவார். மற்ற நடிகர்கள் போல ஏதோ பாடுகிறோம் என பாடமாட்டார். ஒரு தொழிற்முறை பாடகர் போல பாடுவார். பாவம், ராகம், ஸ்ருதி எல்லாம் சரியாக இருக்கும்.. என்ன சொல்கிறோமோ அதை சரியாக புரிந்துகொண்டு பாடுவார்’ என பாராட்டி பேசியிருக்கிறார்.







