கன்னட திரையுலை உலகளவில் கொண்டு சென்ற படம் கே.ஜி.எஃப். இந்த படமே கன்னட திரையுலகின் எல்லையை விரிவு படுத்தியது.
நடிகர் யாஷ் நடிப்பில் உருவான இத்திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1’ யாருக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சக்கை போடு போட்ட படம் கே.ஜி.எஃப். உலகளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் பல மடங்கு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2022-ல் வெளியான ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ திரைப்படம், முந்தைய சாதனைகளை சுக்குநூறாக உடைத்து, உலகளவில் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனை படைத்தது. ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் வெளிப்படுத்திய அதிரடியான நடிப்பு ரசிகர்களைக் கட்டிப்போட்டது. இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸில் மூன்றாம் பாகத்திற்கான குறிப்பு இடம் பெற்றிருந்ததால், அது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கே.ஜி.எஃப் 3 குறித்துப் பரவி வரும் செய்திகளுக்கு நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அவர் பேசுகையில், தற்போது உடனடியாக ‘கே.ஜி.எஃப் 3’ திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை. நான் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான ‘ராமாயணம்’ படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறேன். அதனால், இப்போதைக்கு கே.ஜி.எஃப் 3 சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நானும் இயக்குனர் பிரசாந்த் நீலும் அடிக்கடி தொடர்பில் தான் இருக்கிறோம்; இது குறித்துப் பேசிக்கொண்டுதான் வருகிறோம். மூன்றாம் பாகத்திற்கான சரியான கதை அமைய வேண்டும். முதல் இரண்டு பாகங்களை விட வலுவான திரைக்கதை அமைந்தால், நிச்சயமாக ‘கே.ஜி.எஃப் 3’ உருவாகும்” என்று கூறினார்.







