அஜித் தற்போது கார் ரேஸில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இன்று அவர் நடித்த மங்காத்தா தி்ரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. பொங்கலுக்கு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸாகததால் மங்காத்தா படம் சற்று ரசிகர்களுக்கு ஆறுதலை தந்திருக்கிறது. மங்காத்தா படம் ரீ ரிலீஸ் என்றாலும் அதற்கான புரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸாக வெளியிட்டிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த 50வது திரைப்படம்தான் மங்காத்தா. இந்தப் படம் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்பு முனையை தந்தது. அதுவரை சுமாரான படங்களையே கொடுத்து வந்த அஜித் மங்காத்தா படம் மூலம் தன்னுடைய மார்கெட்டை உயர்த்தினார். வாலி படத்தில் வில்லனாக அஜித் நடித்தாலும் மங்காத்தா படத்தில் அவருடைய எதிர்மறையான கேரக்டர் மேலும் ரசிக்க வைத்தது.
அதுமட்டுமில்லாமல் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் சம்பந்தமான ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் அடிபட்டு வருகிறது. அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைகிறார். அது அஜித்துக்கு 64வது படம். தற்போது கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் ரேஸை முடித்து விட்டு அடுத்த படத்தில் நுழைகிறார் அஜித்.
இந்த நிலையில் ஏகே 64 படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு முறை கூறும் போது பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது அஜித் அடுத்து ஒரு விளம்பர படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே கேம்பா விளம்பர படத்தில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
மீண்டும் அடுத்த மாதம் நோவா ரியல் எஸ்டேட்டுக்காக ஒரு விளம்பர படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதனால் பிப்ரவரி மாதம் துவங்க இருந்த ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீலீலா முதன்மை கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
