வடிவேலுவை வச்சும் செல்ப் எடுக்கலயே!. பிரபுதேவா நடன நிகழ்ச்சி பல கோடி நஷ்டம்!..
Prabudeva: 80களில் பல திரைப்படங்களுக்கு நடனமைத்து முன்னணி நடன இயக்குனராக இருந்த சுந்தரத்தின் 2வது மகன்தான் பிரபுதேவா. அப்பா நடனமைத்த சில படங்களில் இவர் நடனமாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகராக மாறினார். அப்படி அவர் ஆடியே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, சின்ன ராசாவே சிட்டெறும்பு, லாலாக்கு டோல் டப்பிமா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
எனவே, அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் முன்வந்தனர். இந்து என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் பிரபுதேவாவின் நண்பனாக வடிவேலுவும் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா நடனமாடும்படியே பல பாடல்களையும் அமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஒருபக்கம், கமல், ரஜினி, சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும் வேலை செய்தார். மேலும், விஜய் நடித்த போக்கிரி படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதன்பின் சில படங்களை இயக்கினாலும் அவை ஓடவில்லை. சில ஹிந்தி படங்களையும் இயக்கினார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்த வடிவேலுவை பிரபுதேவா கலாய்க்கும் வீடியோக்களும் வெளியானது. வடிவேலுவின் வாயில் கைவிட்டு ஆட்டியது. அவரின் தலைமுடியை கலைத்துவிட்டது என அலப்பறை செய்தார் பிரபுதேவா.
‘ஃபங்சனுக்கு வான்னு கூப்பிட்டு வாய்க்குள்ள விரல் விட்டு ஆட்டுறாரு பிரபு. அவர் எப்பவும் அப்படித்தான். ஷூட்டிங்கிலும் இப்படித்தான் செய்வாரு. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. அதுல சந்தேகமே இல்லை’ என நிகழ்ச்சி முடிந்த பின் பேசினார் வடிவேலு. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
பிரபுதேவா நடனத்தை பார்க்கலாம் என போனால் அங்கு மார்க்கெட் போன சின்ன சின்ன நடிகர்களை கூட்டிவந்து நடனமாட விட்டிருக்கிறார்கள். பிரபுதேவா 4 பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருக்கிறார். எனவே, தொலைக்காட்சி உரிமையை யாரும் வாங்கவில்லை. மேலும், டிக்கெட் விலை அதிகம் என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு 4 கோடிக்கும் மேல் நஷ்டம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.