சுங்கத்துறை விசாரணைகளின் மறுபக்கம்.. IRS அதிகாரி இயக்கிய எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் அக்டோபர் 30ல் ரிலீஸ்!

X
சுங்கத்துறை விசாரணைகளின் மறுபக்கம்.. IRS அதிகாரி இயக்கிய எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் அக்டோபர் 30ல் ரிலீஸ்!

சுங்கத்துறை விசாரணைகள் மற்றும் கடத்தல் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் திரைப்படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர். இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ. சமய முரளி இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் தோ. சமய முரளியே எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி படத்தின் பின்னணி இசையையும் அவர் அமைத்துள்ளார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே வெளியான தாமரை பாடல் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் தங்கம் தங்கம் பாடலும் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் டீசர் அக்டோபர் 14ஆம் தேதியும், டிரைலர் அக்டோபர் 19ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் படத்தில் ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமான கற்பனை கிரைம் கதையாக மட்டும் இல்லாமல், சுங்கத்துறையில் நடைபெறும் விசாரணைகள், கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள், நிழல் உலகத்தின் பின்னணி உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இயக்குநர் தோ. சமய முரளி தனது பணிக்காலத்தில் விசாரித்த பல்வேறு சுங்கத்துறை வழக்குகளில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கற்பனைக் கதையை உருவாக்கியுள்ளார்.

2008ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த தோ. சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் நீண்டகால அனுபவம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி NIT-யில் பொறியியல் படித்த இவர், தனது சிறப்பான பணிக்காக 2021ஆம் ஆண்டு World Customs Organization வழங்கிய விருதையும் பெற்றுள்ளார்.

சுங்கத்துறை அதிகாரியாக மட்டுமின்றி எழுத்து, ஆய்வு, சினிமா மற்றும் இசை உள்ளிட்ட துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ், ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, காக்கி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சுங்கத்துறை தொடர்பாக அவர் எழுதிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-ல் வெளியாகியுள்ளன.

அவர் இயக்கிய முதல் குறும்படமான புதிய பார்வை, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் சைலன்ட் திரைப்படத்தில் நடித்ததுடன் அந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவமும் அவருக்கு உள்ளது. படம் குறித்து தோ. சமய முரளி கூறுகையில், தான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ கதையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடத்தல் மற்றும் நிழல் உலகத்தின் செயல்பாடுகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் ரசிகர்களிடம் கொண்டு செல்வதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் சுங்கத்துறை ஆற்றும் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் படத்தின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் உண்மை சம்பவங்களின் தாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கிறது.