சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடந்த 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. முதல் பாகம் 2023ம் வருடம் வெளியாகி ரூ.630 கோடி வசூலை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.
வசூலை அள்ளும் ஜெயிலர் 2: ஜெயிலர் 2 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளி வருவதால் எப்படியும் இந்த படத்தின் வசூல் உலக அளவில் ரூ.700 கோடியை தாண்டும் என்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களையும் ஜெயிலர் 2 படம் கவர்ந்துள்ளது. ரஜினிக்கு என்ன மாதிரியான காட்சிகளை அமைக்க வேண்டுமோ அதை புரிந்து கொண்டு கச்சிதமாக கதை, திரைக்கதை அமைத்து நெல்சன் அசத்தியிருக்கிறார்.
2 நாள் வசூல்: ஒருபக்கம் அனிருத்தும் பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார். இவையெல்லாம் ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூல் செய்த நிலையில் நேற்று ரூ.100 கோடி வரை வசூல் செய்திருக்கலாம்.. அதாவது இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி வசூலை தாண்டியிருக்கலாம் என்கிறார்கள்.
1000 கோடி வசூல்: இதையடுத்து முதல் 1000 கோடி வசூலைத் தொட்ட தமிழ் திரைப்படமாக ஜெயிலர் 2 இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. சமூகவலைத்தளங்கலில் பலரும் இந்த கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அது நடப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..

மல்டிபிளக்சில் ரிலீஸ் இல்லை: ஒரு திரைப்படம் 100 கோடி வசூலை அடிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்து வசூலை அள்ள வேண்டும். ஆனால், தமிழகத்திலேயே சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஜெயிலர் 2 படம் வெளியாகவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் வசூலில் அதிக பங்கு கேட்டதே இதற்கு காரணம்.
ஓடிடி பஞ்சாயத்து: மறுபக்கம், வட இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே அந்த படத்தை அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிடுவார்கள். ஆனால் ஜெயிலர் 2 திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.. எனவே வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஜெயிலர் 2 படம் வெளியாகவில்லை. எனவே, ஜெயிலர் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை தொட வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.







