மாயக்கண்ணாடியின் தோல்வியால் சேரனுக்காக பண்ண கதையை மாற்றிய கரு.பழனியப்பன்!
சேரன் இயக்கி, நடித்த ‘மாயக்கண்ணாடி’ படம் பெரிய தோல்வியடைந்தது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமில்லாமல், ஒரு நடிகராகவும் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் கரு.பழனியப்பன்.
இவர் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘பிரிவோம் சந்திப்போம்’. இதில் ஹீரோவாக சேரன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
சமீபத்தில், இயக்குநர் கரு.பழனியப்பன் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் “முதல்ல நான் சேரன் சாரை வச்சு எடுக்க இருந்த படம் ‘பிரிவோம் சந்திப்போம்’ இல்ல.

ஒரு திரைப்பட இயக்குநரை சுத்தி நடக்குற மாதிரி ஒரு கதை தான் பண்றதா இருந்துச்சு. ஹீரோ கேரக்டர் ஒரு இயக்குநர் என்பதால், அதுக்கு சேரன் சார் ரொம்ப பொருத்தமா இருப்பாருன்னு நினைச்சு தான் அவரை கமிட் பண்ணுனேன்.
அதுக்கு முன்னாடி அவர் நடிச்சு, இயக்கின ‘மாயக்கண்ணாடி’ படம் ரிலீஸ் ஆச்சு. அது அவருக்கு மிகப் பெரிய தோல்விப் படமா ஆயிடுச்சு. அதுனால, இந்த படத்தோட பட்ஜெட்லாம் குறைக்க சொல்லிட்டாங்க.

நான் உடனே தயாரிப்பாளர் கிட்ட, ‘பிரிவோம் சந்திப்போம்’ கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டுட்டு இது ரொம்ப நல்லா இருக்கு, ஒரு பெண்ணின் தனிமையை இதுவரை எந்த படமும் பேசவே இல்ல. நாம இதையே பண்ணிடலாம்ன்னு சொன்னாரு. அப்படி தான் அந்த படம் ஆரம்பமாச்சு” என்று கூறியுள்ளார்.









