மண்டாடி படத்தில் சூரிக்கு வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஹைட் அண்ட் சில்க் திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ராஜேந்திர பாலா இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மண்டாடி படத்தின் வெற்றிக்குப் பிறகு சுஹாஸ் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் நடிகர் வருண் தேஜும், தமிழில் நடிகர் சூரியும் டைட்டில் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். சுஹாஸுக்கு ஜோடியாக லப்பர் பந்து, டிசி படங்களின் ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்து வருகிறார்.
பட்டுப் புடவை நெசவாளரின் வாழ்க்கையையும், ஒரு மார்டன் பெண்ணின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. 3 BHK படத்தின் மூலம் பிரபலமான அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். விரைவில் ஹைட் அண்ட் சில்க் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.







