நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினார். ஒரு கட்டத்தில் அந்த நற்பணி மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. விஜய் மக்கள் இயக்கம் மக்கள் சேவையிலும் ஈடுபட்டது. அப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என பலரும் பேசினார்கள்.
ஒருகட்டத்தில் அரசியலுக்கு வருவது என முடிவெடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டுவிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியையும் அவர் அமைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அவர் மாறிவிட்டார்..
விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களின் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி வருகிறார்கள். அவர்களின் நற்பணி மன்றங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் தங்களது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து ‘மக்கள் சேவையில் ஈடுபடுங்கள்.. மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.. நல்லதே நடக்கும்’ என்று கூறி வருகிறார்கள். எனவே, அவர்களும் அரசியலுக்கு வரப்போகிறார்கள்’ என செய்திகள் வெளியாகி வருகிறது..

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி ‘விஜய் அரசியலுக்கு வந்து தோற்றுப் போயிருந்தால் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள். அவர் முதல்வராகி விட்டதும் இவர்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.. அதனால்தான் விஜயை அப்படியே பின்பற்றுகிறார்கள்..
அதோடு நடிகர்கள் எப்போதும் வெள்ளை பணத்தை சம்பளமாக பெற மாட்டார்கள். அதில் பாதி கருப்பு பணம்தான்.. அரசியலுக்கு வந்துவிட்டால் அந்த கருப்பு பணத்தை வெள்ளப் பணமாக மாற்ற முடியும்.. இதுவும் ஒரு முக்கிய காரணம்.. தனுஷ் அரசியலுக்கு வந்தது வேண்டுமானால் விஜய்யை பின்பற்றி இருக்கலாம்.. ஆனால், சிவகார்த்திகேயன் தனுசுக்கு எதிராகத்தான் களமிறங்கியிருக்கிறார். ஏனெனில் தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பெரிய போட்டி நடைபெறுகிறது’ என்று அவர் கூறுகிறார்..

மேலும் ‘சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்களுக்கு மக்கள் மீது உண்மையான அக்கறையெல்லாம் இல்லை.. அதுவும் தனுஷெல்லாம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை கொண்ட படங்களில்தான் நடித்து சினிமாவை சீரழித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தனுஷோ, சிவகார்த்திகேயனோ.. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? இப்போது என்ன திடீரென்று அவர்களுக்கு மக்கள் மீது பாசம்?’’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.







