யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 26 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய யஷ், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை தான் எப்போதும் கவனித்து வந்ததாகவும், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் யஷ் தெரிவித்தார்.
மேலும், விஜய் தனது திரைப்பயணத்தில் பெற்ற அன்பையும் மரியாதையையும் தற்போது தமிழக மக்களுக்கே திருப்பிக் கொடுக்கும் நிலையில் இருப்பதாகவும் யஷ் குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாகவே அவருக்கு இந்தப் பொறுப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பேசினார்.
விஜய்யின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தன்னை கவர்ந்துள்ளதாக தெரிவித்த யஷ், தமிழக மக்களின் நலனுக்காக அவர் இரவு பகலாக உழைப்பதாக தயாரிப்பாளர் கே.வி.என். வெங்கட் நாராயணா கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விஜய்யின் அரசியல் பயணம் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என தான் விரும்புவதாகவும் யஷ் தனது பேச்சில் தெரிவித்தார். விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார். யஷின் இந்தப் பேச்சு, ‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியைத் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.







