கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன் மாதிரியே கொடை வள்ளலாக இருந்தவர் எம்ஜிஆர். தான் யார் யாருக்கு உதவி பண்ணனும்னு எம்ஜிஆர் பட்டியல் போட்டதே இல்லை. ஆனால் அவரால் உதவி பெற்றவர்கள் பல இடங்களில் அதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். அப்படி எம்ஜிஆரிடம் உதவி பெற்றவர்களில் ஒருவர் காகா ராதாகிருஷ்ணன். அவர் சொன்ன தகவல் தான் இது.
காகா ராதாகிருஷ்ணனும், சிவாஜியும் ஒரே நாடகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இருவரும் நாடகக் குழுவில் சேர்வதற்கு முன்னால் ஒன்றாகத் தான் நாடகம் பார்க்கப் போவாங்களாம். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் நாடகக் கொட்டகையில போய் உட்கார்ந்த உடனே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கவே மாட்டாங்களாம்.
அவங்க கவனம் எல்லாம் அந்த நாடகத்து மேலயேத்தான் இருக்குமாம். நாடகத்தைப் பார்த்துட்டு வந்ததுக்குப் பிறகு ரெண்டு பேரும் அந்த நாடகத்துல எப்படி நடிச்சாங்களோ அப்படி நடிச்சு பார்த்துப்பாங்களாம். இப்படி நடிகர்திலகத்தோடு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் காகா ராதாகிருஷ்ணன். சிவாஜி கணேசன் மிகப்பெரிய உயரத்துக்குப் போனதுக்குப் பின்னால என்னை மறக்காத ஒரு கலைஞராக இருந்தார்.
எங்களது நட்பும் பாசமும் அப்படியே தொடர்ந்தது என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் பற்றிப் பல பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார் காகா ராதாகிருஷ்ணன். அதே நேரம், எம்ஜிஆரைப் பற்றிய ஒரு அபூர்வ தகவலையும் ஒரு பத்திரிகையில் பதிவு செய்துள்ளார். தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்திலே எம்ஜிஆரோடு நடித்துக் கொண்டு இருந்தார் காகா ராதாகிருஷ்ணன்.
அப்போது, எம்ஜிஆர் காகா ராதாகிருஷ்ணன்கிட்ட உங்க சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு இருக்கிறார். எனக்கு 3000 ரூபாய் தர்றாங்க என காகா ராதாகிருஷ்ணன் சொன்னார். உடனடியா, தயாரிப்பாளரைக் கூப்பிட்ட எம்ஜிஆர், என்ன அண்ணனுக்கு இவ்வளவு கம்மியா சம்பளம் தர்றீங்க..?
அண்ணனுக்கு 5000 ரூபாய் சம்பளம் கொடுங்க என்று சொல்லி இருக்கிறார். இது பல நடிகர்களும் செய்யக்கூடிய விஷயம்தான். அவருக்கு 5000 தாங்க, 7000 தாங்கன்னு சொல்லிட்டுப் போலாம். இதுக்குப் பின்னால எம்ஜிஆர் சொன்ன வார்த்தைதான் ரொம்ப முக்கியம். இந்த டிஃபரன்ஸ் இருக்குல்ல. 2000 ரூபாய். அதை என்னுடைய சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளுங்கள் என்று அந்த தயாரிப்பாளரிடம் சொன்னாராம் எம்ஜிஆர்.
அங்குதான் எம்ஜிஆர் என்ற மனிதர் மாமனிதராக உயர்ந்து நிற்கிறார்.







