முடிவுக்கு வந்த பிரச்சனை.. மீண்டும் ஒன்றிணைந்த நாஞ்சில் விஜயன் – வைஷூ
சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நாஞ்சில் விஜயன் மற்றும் வி.ஜே. வைஷூ

சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நாஞ்சில் விஜயன் மற்றும் வி.ஜே. வைஷூ . இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர்களது உறவு பல்வேறு சர்ச்சைகளால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
வைஷூவும் நாஞ்சில் விஜயனும் நீண்ட காலமாக நெருங்கிய நட்பில் இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தனிப்பட்ட உறவு ஏற்பட்டதாகவும் வைஷூ தரப்பில் கூறப்பட்டது. இதன் பின்னர் நாஞ்சில் விஜயனின் திருமண வாழ்க்கை தொடர்பாகவும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது. வைஷூ, நாஞ்சில் விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இருவருக்கும் இடையிலான விவகாரம் சமூக வலைதளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பெரும் விவாதமாக மாறியது.
அப்போது வைஷூ கூறிய குற்றச்சாட்டுகளை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தன்னைப் பொறுத்தவரை வைஷூ ஒரு நண்பர் மட்டுமே என்றும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே விலகியதாகவும் அவர் தனது தரப்பு விளக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் காரணமாக சில முடிவுகளை எடுத்ததாகவும் கூறியிருந்தார். இதனால் இரு தரப்பிலும் மாறி மாறி விளக்கங்கள் வெளியாகி, வார்த்தைப் போர் வரை சென்றது. சமூக வலைதளங்களிலும் இவர்களது விவகாரம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

பின்னர் இருவரும் தங்களுக்குள் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொண்டு சமரசமாக செல்ல முடிவு செய்ததாகவும், வைஷூ தனது புகாரை வாபஸ் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின. இதன் மூலம் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த சர்ச்சை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களில் இந்த விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. நாஞ்சில் விஜயனின் குடும்ப வாழ்க்கை தொடர்பான பதிவுகள் வெளியான நிலையில், அதற்கு வைஷூவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். தான் யாருடைய குடும்பமும் பிரிய வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடியதாகவும் வைஷூ கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தற்போது வைஷூ வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்,
மனம் திறந்து பேசினோம். கசப்புகள் எல்லாம் மறந்தோம். மீண்டும் பழையப்படி இணைந்தோம். இனி குடும்பமாக ஒன்றிணைந்து நிறைய சாதிப்போம். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இப்படிக்கு உங்கள் வி.ஜே. வைஷூ, நாஞ்சில் விஜயன் என்று தெரிவித்துள்ளார்.












