இன்று தனது 93வது வயதில் பயணித்துக் கொண்டு இருப்பவர் பின்னணிப் பாடகி பி.சுசீலா. இவர் தென்னிந்திய மொழிகள் தவிர, வங்காளம், ஆங்கிலம், மராத்தி, படுகா உள்பட பல மொழிகளில் பாடியுள்ளார்.
சிறந்த பாடகிக்காக 5 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். மாநில அரசின் விருதுகள் பலவற்றை வாங்கிக் குவித்துள்ளார். இவரை மிகவும் கவர்ந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்.
இவர் சென்னை வந்தால், பி.சுசீலாவை சந்திக்காமல் போகவே மாட்டார். அதே போல் தான் பி.சுசீலாவும் எப்போ மும்பை சென்றாலும் லதா மங்கேஷ்கரை சந்திக்காமல் திரும்ப மாட்டார். அவரது பாட்டுன்னா பி.சுசீலாவுக்கு அந்தளவுக்குப் பிடிக்கும். அவரது பாடல்கள் எல்லாவற்றின் ரெக்கார்டுகளையும் வாங்கி சேமித்துள்ளார்.
அவர் அதிகமாகப் பாடியது சரோஜாதேவிக்குத் தான். அவர் எப்படி கொஞ்சி கொஞ்சிப் பேசுவார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதனால் அவருக்குப் பாடும்போது மட்டும் தன்னுடைய குரலை மாற்றி மழலைக் குரலில் பாடுவாராம் பி.சுசீலா. இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பி.சுசீலாவை தென்னிந்திய இசைக்குயில் என்றும் மெல்லிசை அரசி என்றும் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இப்போது அவர் மேடையில் ஏறி பாடினாலும் இன்னும் அந்தக் குரல் மட்டும் அப்படியே வயதாகாமல் இளமையாக இருக்கும் என்பது ஆச்சரியமே.







