திராவிட முன்னேற்ற கழகத்துல பல ஆண்டுகள் தன்னை இணைத்துக் கொண்டாலும், நாள், கிழமை போன்றவற்றிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்னு பார்க்கலாமா…
எம்ஜிஆரின் 100வது படம் ஒளிவிளக்கு. இந்தப் படத்தைத் தயாரித்தவர் எஸ்எஸ்.வாசன். இந்தப் படத்தைத் தயாரிக்கும்போது அதற்கான கால்ஷீட் எல்லாம் எம்ஜிஆரிடம் பேசிவிட்டு வரும்படி தன்னோட மகனான எஸ்.எஸ்.பாலனிடம் சொன்னார். உடனே சத்யா ஸ்டூடியோவுக்கு போன் போட்ட பாலனிடம், எம்ஜிஆரை எப்படி அழைப்பது என்பதில் சிறு குழப்பம் இருந்தது.
அதனால அங்கே போனை எடுத்த உடனே, நான் எம்ஜி.ராமச்சந்திரனிடம் பேச வேண்டும். தொடர்பு கொடுக்க முடியுமா என்று கேட்டார். அந்தக் காலகட்டத்துல எம்ஜிஆரை எல்லோரும் ‘சின்னவர்’ என்றுதான் அழைப்பார்களே தவிர, எம்ஜி.ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அதனால் அந்த ஆபரேட்டர் ரொம்ப குழப்பத்திற்கு உள்ளானார். நீங்க யாரு பேசறதுன்னு கேட்டபிறகு தான் எதிர்முனையில் யார் என்று தெரியவந்தது.
உடனே பேசிய எம்ஜிஆர், வணக்கம். வாழ்த்துக்கள் என்றார். வாழ்த்துக்கள் சொன்னது எஸ்எஸ்.பாலனுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. கால்ஷீட் விஷயமாக உங்களிடம் பேசி வரும்படி அப்பா சொன்னார்.
அதனால் இன்றைக்கு வரட்டுமா என்று கேட்டார். இன்றைக்கு அஷ்டமி. நாளை நவமி. அதனால் நாளை மறுநாள் வாருங்கள் என்றாராம் எம்ஜிஆர். இந்த தகவலை தன்னுடைய ஆனந்த விகடன் பத்திரிகையிலேயே பதிவு செய்துள்ளார் எஸ்எஸ்.பாலன்.







